
உத்தராகண்டில் சமோலி மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மேகவெடிப்பில் பல வீடுகள், வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தன. இதில் பலர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் உள்ள தாராலி என்ற பகுதியில் இன்று அதிகாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் கனமழை கொட்டியது. இதன் காரணமாக தாராலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்தன. இதில் ஏராளமான குடியிருப்புகள், கட்டிடங்கள், வாகனங்கள் மண்ணில் புதைத்தன, கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலர் மாயமாகியுள்ளனர். இதையறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சாக்வாரா என்ற கிராமத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் பெண் ஒருவர் சிக்கி பலியானார். மேக வெடிப்பை அறிந்த ஏராளமான மக்கள் குடியிருப்புகளை விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடி தஞ்சம் அடைந்தனர். மேலும் தாராலி தாலுகாவில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” சாமோலி மாவட்டத்தின் தாராலி பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டதாக சோகமான செய்தி கிடைத்தது. மாவட்ட நிர்வாகம், எஸ்டிஆர்எஃப் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், மேலும் நிலைமையை தனிப்பட்ட முறையில் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். அனைவரின் பாதுகாப்பிற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே உத்தராகண்ட் மாநிலத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இடியுடன் கூடிய கன மழையானது தெஹரி, டேராடூன், சாமோலி, ருத்ரபிரயாக், நைனிடால், அல்மோரா ஆகிய பகுதிகளில் பெய்யும் என்று எச்சரித்துள்ளது.