
நாங்கள் தேர்வு செய்துள்ள வேட்பாளர் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பவர் என்று கனிமொழி எம்.பி கூறினார்.
இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்க திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளர் என்பது குறித்து மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி இந்தியா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என்று கார்கே இன்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பையொட்டி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், ” நீதிபதியாக இருந்த போது சுதர்சன் ரெட்டி மக்களுக்கான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். பாஜகவின் இந்துத்துவா அரசியலை எதிர்த்து பேசக்கூடியவர். அதனால் அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ஒருமித்த கருத்துடன் முடிவு எடுத்துள்ளோம். இது சித்தாந்தங்களுக்கு இடையேயான நடக்கும் மோதலாம்.
அதனால்தான் ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ள ஒரு வேட்பாளரை எதிர்க்கும் வகையில், எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து எங்கள் வேட்பாளரை முன்மொழிந்திருக்கிறோம். நாங்கள் தேர்வு செய்துள்ள வேட்பாளர், அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பவர். அவர்கள் தேர்வு செய்த வேட்பாளர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் மட்டும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அக்கறை உள்ளதென அர்த்தமாகி விடாது” என்றார்.