
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி சடலத்துடன் போராட்டம் நடத்திய பெண்களின் குரல்வளையை நெரித்து போலீஸார், தரையில் தூக்கி வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தின் ததியா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பங்கரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நே ற்று மாலை மின்தடை ஏற்பட்டது. அந்த ஊரைச் சேர்ந்த மின் ஊழியர் பிரஜேஷ் என்பவர் மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் வந்தால் வேலை செய்து கொண்டிருந்த பிரஜேஷ் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த செய்தி அறிந்த பிரஜேஷ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறந்தவரின் சடலத்துடன் திருவா கோட்வாலி மின்நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது காவல் துறையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு, தடியடி சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது. கல்வீச்சில் போலீஸ் வாகனம் சேதமடைந்தது. சில போலீஸார் காயமடைந்தனர். இதனால் போலீஸார் தடியடி நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்களை கழுத்தை நெரித்து தரையில் வீசியதாக போலீஸார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த தாக்குதலில் பெண்கள், முதியவர்கள், கிராம மக்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக கன்னுஜ் காவல் துறை அதிகாரி வினோத் குமார் கூறுகையில், கல் வீசியதில் ஒரு போலீஸ்காரர் உள்பட பலர் காமடைந்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்த சம்பவத்தால் பங்கரா கிராமம் பதற்றமாக உள்ளது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.