
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது நாம் சென்னை கோட்டையில் கொடி ஏற்றுவோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்ற கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், டெல்லியில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நமது நாட்டின் சாதனைகளையும், தீவிரவாதத்துக்கு எதிராக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். இந்தியாவை உலகின் மிகப்பெரிய 4-வது பொருளாதார நாடாக அவர் மாற்றி காட்டியிருக்கிறார்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. எனவே நாம் அனைவரும் திமுக ஆட்சியை அகற்றுவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கும் நாம் உறுதி ஏற்க வேண்டும். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசை அச்சுறுத்தி வருகிறார்கள். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். 2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது நாம் சென்னை கோட்டையில் கொடி ஏற்றுவோம். இது உறுதி என்றார்.