
ஓ.பன்னீர்செல்வத்துடன் நான் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும்
என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது அவரை சந்திக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரும்பினார். இதற்காக கடிதமும் எழுதினார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிரதமர் மோடி, ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறி இருக்கிறார். அவரது ஆதங்கம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அவரை எங்கள் கூட்டணிக்கு மீண்டும் கொண்டு வர டெல்லியில் உள்ள பாஜக. தலைவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. நான் அவரோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். ஓ.பன்னீர் செல்வம் தன் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும் என்றார்.