நிலத்தகராறில் திமுக செயலாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள கருமந்துறையை அடுத்த கிராங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதியில் திமுக கிளைச் செயலாளராக இருந்து வந்தார். அத்துடன் முன்னாள் வனக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு சரிதா(40) என்ற மனைவியும் கோகிலா, பரிமளா என்ற இரு மகள்களும், நவீன் என்ற மகனும் உள்ளனர். ராஜேந்திரனுக்கும், அவரது உறவினர்கள் ராஜமாணிக்கம் மற்றும் பழனிசாமி ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது
.
இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு ராஜேந்திரன் வீட்டு அருகே படுத்திருந்தார். அப்போது ராஜேந்திரனை மர்மநபர்கள், துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். இதில் ராஜேந்திரன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், உயிரிழந்த ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் போலீஸார், ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வு செய்ய அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகிய இருவரையும் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


