இந்திய கடற்படை ரகசியங்களை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவை மூலம் பாகிஸ்தானுக்கு கசிய விட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இருவரை கர்நாடகாவில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10-ம் தேதி கார் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில 14 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாதிகளையும், அவர்களுக்கு உதவும் கும்பலையும் போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலம், உடுப்பியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர். கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, மால்பே காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவர்கள் இருவர் மீதும் பிஎன்எஸ் பிரிவு 152 மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் (ஓஎஸ்ஏ) பிரிவு 3 மற்றும் 5 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணத்திற்காக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் பாகிஸ்தானுடன் முக்கியமான இந்திய கடற்படை தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக கர்நாடக காவல்துறை இவர்கள் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் (20) மற்றும் சாந்திரி (37) என அடையாளம் காணப்பட்ட அந்தக் குற்றவாளிகள் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் மால்பே பிரிவில் பணிபுரிந்தனர். காவல்துறை உதவி காவல் ஆணையர் ஹர்ஷா பிரியம்வதா மற்றும் மால்பே நிலைய துணை ஆய்வாளர் டி. அனில் குமார் ஆகியோர் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
இதில் ரோஹித் முக்கிய குற்றவாளி என்று முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த ஆறு மாதங்களாக மால்பே பிரிவில் இன்சுலேட்டராகப் பணிபுரிந்து வந்தார், மேலும் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரியும் அவரது கூட்டாளியான சாந்த்ரியின் உதவியுடன் இந்திய கடற்படைக் கப்பல்களின் ரகசியப் பட்டியல், அவற்றின் அடையாள எண்கள் மற்றும் பிற வகைப்படுத்தப்பட்ட விவரங்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல்களை பாகிஸ்தானுக்கும், ஒருவேளை பிற நாடுகளுக்கும் அனுப்பப்பட்டதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
“குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்” என்று உடுப்பி காவல் கண்காணிப்பாளர் ஹரிராம் சங்கர் கூறினார். மத்திய அரசின் கீழ் உள்ள துறைமுகங்கள், கப்பல் கட்டும் தள நடவடிக்கைகள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் தொடர்பான முக்கியமான விவரங்களை இவர்கள் இருவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானுக்கு வழங்கி வந்ததாகவும், அதற்கு ஈடாக பணம் பெற்றுள்ளனர்.
மால்பேக்கு மாற்றப்பட்ட பிறகும், ரோஹித், சாந்த்ரியிடமிருந்து தகவல்களைப் பெற்று வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டார் என்று ஹரிராம் சங்கர் கூறினார். இந்திய கடற்படை கப்பல்கள் கேரளாவில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மால்பே பிரிவு தனியார் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக கப்பல்களை உற்பத்தி செய்கிறது.இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்திய கடற்படை தகவல்களை அவர்கள் கசிய விட்டுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


