மலேசியா அருகே கடலில் படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மியான்மரில் இனப்படுகொலை மற்றும் துன்புறுத்தலை எதிர்கொண்ட ரோஹிங்கியா இன மக்கள் அங்கிருந்து தப்பி வங்கதேசத்திற்கு அகதிகளாக இடம் பெயர்கின்றனர். இதற்காக போதுமான வசதிகள் இல்லாத படகுகள் மூலம் ஆபத்தான முறையில் சட்டவிரோத பயணங்களை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் தொடக்கத்தில் 5,100-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் மியான்மர் மற்றும் வங்கதேசத்தை விட்டு வெளியேற படகுகளில் சென்றுள்ளனர், அப்போது படகு கவிழ்ந்து 600 பேர் இறந்துவிட்டதாகவோ அல்லது காணாமல் போனதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா. அகதிகள் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மலேசியாவின் பிரபலமான ரிசார்ட் தீவான லங்காவிக்கு வடக்கே உள்ள தருடாவோ தீவுக்கு அருகில் சுமார் 300 பேர் மூன்று படகுகளில் சென்றனர். அப்போது ஒரு படகு கவிழ்ந்ததில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளதாக மலேசியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கெடா மாகாண காவல்துறைத் தலைவர் அட்ஜ்லி அபு ஷா கூறுகையில், மியான்மரில் இருந்து வந்த ஒரு பெரிய கப்பலில் மக்கள் ஆரம்பத்தில் ஏறினர், ஆனால் மலேசியாவை நெருங்கும்போது சுமார் 100 பேரை ஏற்றிச் செல்லும் மூன்று சிறிய படகுகளில் மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதில் ஒரு படகு மூழ்கியது. மற்ற இரண்டு படகுகளின் நிலை தெரியவில்லை என்றார்.
மீட்பு நடவடிக்கை குறித்து கெடா மாநில கடல்சார் இயக்குநர் ரோம்லி முஸ்தபா கூறுகையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெண்கள், குழந்தைகள் என 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றார். மீட்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டாலும் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


