நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் (84). இவர் குடும்பத்துடன் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஹொசகேரேஹள்ளியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை பெங்களூரு எல்க்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையறிந்த ரஜினிகாந்த் உடனடியாக சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு விரைந்தார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டை சந்தித்து நலம் விசாரித்தார். ரஜினிகாந்த் அவரது அண்ணனை மருத்துவமனையில் சென்று பார்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சத்யநாராயண ராவ் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


