நயினார் நாகேந்திரன் இந்த முறை வெற்றி பெற்றால், திமுகவினரின் பதவி பறிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில், 234 தொகுதி கட்சி நிர்வாகிகளை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். திமுக மாவட்ட செயலாளர் முதல் கிளைச்செயலாளர்கள் வரை நிர்வாகிகளை அவர் தனித்தனியே சந்தித்து கருத்து கேட்டு வருகிறார். உடன் பிறப்பே வா என்ற இந்த நிகழ்ச்சியில் இதுவரை 33 நாட்களில் 73 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த நிலையில் நெல்லை மற்றும் சங்கரன் கோவில் தொகுதி நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் திமுக கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்றும், நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றால் அனைவரின் பதவிகளும் பறிக்கப்படும் என்று மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தெற்கு மண்டல பொறுப்பாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார்.


