உங்களை பாஜக இயக்குகிறதா என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவம்பர் 5) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அதிமுக என்ன மாதிரியான குடும்ப கட்சியாக இருக்கிறது என்பது உங்களுக்கு (ஊடகத்தினர்) நன்றாகவே தெரியுமே. நீங்களும் மீடியாவில் வெளியிட்டுக் கொண்டு தானே இருக்கிறீர்கள். என்ன நடக்கிறது என உங்களுக்குத் தெரியாதா?. நான் சொல்லத் தேவையில்லை. மகன் தலையிடுகிறார். மைத்துனன் தலையிடுகிறார். எங்கெங்கு இயக்குகின்றனர் என்பது மீடியாவுக்கு தெரியாதது கிடையாது. அதனால் அதைப் பற்றி சொன்னேன். இது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கும்” என்றார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இருப்பது எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு “ இதுகுறித்து நீங்கள் பின்னால் தெரிந்து கொள்வீர்கள். அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்” என்றார். இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “நல்லதே நடக்கும். தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில் 250 பக்கம் இருக்கிறது. அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து இருப்பதை வெளியில் சொல்லக்கூடாது” என விதிகள் இருக்கிறது என்றார்.
உங்களை பாஜக இயக்குகிறதா என்ற கேள்விக்கு, “நான் 53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். என்னைத் தனிபட்ட முறையில் யாரும் இயக்க முடியாது” என்றார். மூத்த அரசியல்வாதியான உங்களை நீக்கி இருக்கின்றார்களே என்ற கேள்விக்கு , ” இது நீங்கள் அவரிடம் (எடப்பாடி பழனிசாமி) கேட்க வேண்டிய கேள்வி. மனோஜ் பாண்டியன் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைத்திருப்பது அவருடைய விருப்பம்” என்றார். அதிமுக தரப்பில் இருந்து யாராவது பேச்சுவார்த்தை நடத்துகின்றனரா என கேள்விக்கு யார் யார் பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும் எனக்கும் தான் தெரியும். அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது” என்றார். பேச்சுவார்த்தை நடப்பது உண்மையா என்ற கேள்விக்கு, “உறுதியாக” என செங்கோட்டையன் பதில் அளித்தார்.


