நடிகர் ‘விஷ்ணு விஷால்’, செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவான படம் `ஆர்யன்’. இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “ராட்சசன்” படம் போல க்ரைம் திரில்லர் படமான ஆர்யன் படமும் வசூல் சாதனை படைத்துள்ளளது.

“ஆர்யன்” பட வெற்றி விழா:-
இப்படத்திற்கான வெற்றி கொண்டாட்ட விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர், நடிகர் விஷ்ணு விஷால், நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய நடிகர் விஷ்ணு விஷாலிடம், செய்தியாளர்கள் மாறி, மாறி கேள்விகளை கேட்டார்கள்.

கிளைமாக்ஸ் காட்சிகளை மாற்றியது யார்?
“ஆர்யன்” படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை நீங்கள் மாற்றினீர்களா..? என்று கேட்டதற்கு, நடிகர் விஷ்ணு விஷால், “ராட்சசன் படத்தில் ஏன் அவன் சைக்கோ ஆனான் என்பதற்கு காரணம் அதிகமாக வைத்திருந்தோம். நீங்கள் பார்க்காத 10 நிமிடமும் எங்களிடம் இருக்கிறது.
அதை வைத்து மிகவும் நியாயப்படுத்தி, அவனை நல்லவனாக்க வேண்டாம் என முடிவு செய்தோம். அதை குறைக்க இயக்குநர் ராமிடம் நான் 3 மாதங்கள் தொடர்ந்து பேசினேன். அந்த முடிவு சரியாக தான் அமைந்தது..”

“இந்தப் படத்தை பொறுத்தவரை அந்த கதாபாத்திரம் சொல்லும் விஷயங்கள் சரியாக இருந்தது. எனவே இதனை நியாயப்படுத்தலாமா வேண்டாமா என்ற விவாதம் நடந்தது. அப்போது இதனை நியாயப்படுத்தலாம் என முடிவுக்கு வந்தோம். பல திரையிடல்களும் நடத்தினோம். அப்போது யாருக்கும் இது குறையாக தெரியவில்லை. ரிலீசுக்கு பிறகுதான் இந்த விஷயம் வெளியே வந்தது..”என்றார்.

நடிகர்கள் சம்பளத்தை குறைக்கனும்!
மற்றொரு செய்தியாளர், தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுக்கும் தயாரிப்பாளராக இப்போதைய தயாரிப்பாளர்களுக்கு ஒரு அறிவுரை சொல்வதென்றால் என்ன சொல்வீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த விஷ்ணு விஷால், “தயாரிப்பாளர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவு வளரவில்லை; ஆனால், ஹீரோக்களுக்கு ஒரு பரிந்துரையை சொல்வேன். சம்பளத்தை கொஞ்சம் கம்மியாக வாங்குங்கள்; அப்போதுதான் படத்தின் உருவாக்கத்திற்கு செலவு செய்ய முடியும்..” என்று பதிலளித்தார்.
மேலும் தற்போதுள்ள ஹீரோக்கள் தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்பதையும் மறைமுகமாக நடிகர் விஷ்ணு விஷால் சுட்டிக்காட்டி உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


