கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில் பேனரில் இருந்த எடப்பாடி பழனிசாமி புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். அத்துடன் பத்து நாட்களுக்குள் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று காலக்கெடுவும் விதித்தார். இதனால் இவரது மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சி பதவிகளை அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதனால் செங்கோட்டையன் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார்.
இந்த நிலையில், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தியில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கட்சி கொடி கட்டிய காரில் செங்கோட்டையன் நேற்று முன்தினம் பயணம் செய்தார். அங்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் இணைந்து தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் பங்கேற்க வந்த சசிகலாவையும் சந்தித்து பேசினார். அதன் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் செங்கோட்டையன் பங்கேற்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். இதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ” கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கியது குறித்து நாளை (நவம்பர் 1) விளக்கம் அளித்து பேச உள்ளேன். கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் காலை 11 மணிக்கு இதற்கான விளக்கத்தை அளிப்பேன்” என்று பதிலளித்தார்.
இந்த நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரிலிருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அந்த இடத்தில் ஜெயலலிதா புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி புகைப்படம் செங்கோட்டையன் அலுவலகத்தில் மறைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


