கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டோரிடம் தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். விரைவில் கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூறுவதாக கூறினார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியை நேரில் வந்து கொடுப்பதாக கூறினார். ஆனால், கடந்த 18-ம் தேதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் தவெக சார்பில் வரவு வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சம்பவம் நடைபெற்று 30 நாளுக்குள் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூற முடிவு செய்யப்பட்டது. ஆனால், விஜய் கரூர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கரூர் சென்று நேரில் ஆறுதல் அளிப்பதற்கு பதில், பாதிக்கப்பட்டவர்களை சென்னை வரவழைத்து ஆறுதல் கூற விஜய் முடிவு செய்தார். அதன்படி பாதிக்கப்பட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தவெக நிர்வாகிகள் பேசினர். அதன்படி கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 5 சொகுசு பேருந்தில் சென்னை நேற்று இரவு அழைத்து வரவழைக்கப்பட்டு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு ஏற்பாடு உள்ளிட்டவை செய்யப்பட்டன.
இந்த நிலையில், இன்று(அக்டோபர் 27) காலை, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தனித்தனியாக தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசி வருகிறார். அவர்களின் கோரிக்களையும் அவர் கேட்டறிந்தார். அப்போது கரூரில் கூட்ட நெரிசலில் பலியான மோகன் (19) என்பவரின் தந்தையை ஓட்டலுக்குள் தவெக நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஓட்டல் வாசலில் மோகனின் தந்தை காத்திருந்தார். தனது மகன் இறப்பு சான்றிதழை காட்டிய பின் அவர், ஓட்டல் அறைக்குள் செல்ல தவெக நிர்வாகிகள் அனுமதித்தனர்.


