வங்கக்கடலில் மொந்தா புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில், புயலாக உருவாகியுள்ளது. இதற்கு தாய்லாந்து வழங்கிய மொந்தா எனப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் 600 கிலோ மீட்டர் தொலைவில் மொந்தா புயல் நிலைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவை நோக்கி மணிக்கு சுமார் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல், இன்று தீவிர புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பின்னர், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே நாளை (அக்.28) மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. மொந்தா புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆந்திரா மற்றும் ஏனாமிற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மொந்தா புயல் உருவான நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை மறுநாள்(அக்.29) திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


