பிஹார் தேர்தலை சீர்குலைக்க சதி செய்த பயங்கர குற்றவாளிகள் 4 பேர் டெல்லியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
டெல்லியின் பகதூர் ஷா மார்க்கில் இன்று அதிகாலை டெல்லி மற்றும் பிஹார் காவல்துறை இணைந்து நடத்திய என்கவுன்ட்டரில் ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த கும்பலின் தலைவனான ரஞ்சன் பதக்(25), பிம்லேஷ் மஹ்தோ(25), மனிஷ் பதக்(33) மற்றும் அமன் தாக்கூர் (21) ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் அமன் தாக்கூர் டெல்லியின் கர்வால் நகர் பகுதியைச் சேர்ந்தவர். மற்ற மூவரும் பிஹாரில் உள்ள சீதாமர்ஹியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இச்சம்பவம் குறித்து பேசிய டெல்லி குற்றப்பிரிவு டிசிபி சஞ்சீவ் யாதவ், “போலீஸார் அவர்களைப் பிடிக்க முயன்றபோது அந்த கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் போலீஸார் நடத்திய பதிலடி தாக்குதலில் நான்கு குற்றவாளிகளும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாகினர். பின்னர் அவர்கள் ரோஹினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.” என்று கூறினார். போலீஸாரால் கொல்லப்பட்ட அனைவரும் கொலைகள் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளைகள் உட்பட பிஹாரில் பல வழக்குகளில் தேடப்பட்டவர்கள். கும்பலின் தலைவனான ரஞ்சன் பதக், பிஹார் மற்றும் அருகிலுள்ள மாநிலங்களின் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பிஹார் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கடந்த மூன்று மாதங்களாக சீதாமர்ஹி மாவட்டத்தை இந்த கும்பல் அச்சுறுத்தி வந்தது, இந்த கும்பல் சமீபத்தில் 5 ஒப்பந்தக் கொலைகள் மற்றும் 2 மிரட்டி பணம் பறித்தல் சம்பவங்களைச் செய்துள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் இப்பகுதியில் அச்சம் மற்றும் வன்முறை சூழலை உருவாக்கியுள்ளன. காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆடியோ கிளிப்பில், பிஹார் தேர்தலுக்கு முன்னதாக குற்றச் செயல்கள் மூலம் அமைதியை சீர்குலைக்கும் திட்டங்களை ரஞ்சன் பதக் விவாதிப்பது தெரிய வந்தது. அத்துடன் இக்கும்பல் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடையே அச்சத்தை பரப்ப முயன்றது. தொழில்நுட்ப மற்றும் மனித நுண்ணறிவுஅடிப்படையில் பிஹார் காவல்துறையினர் லூதியானா, டெல்லி மற்றும் பிற நகரங்களில் இந்த கும்பலை தேடி வந்தது. இந்த நிலையில், இன்று பிஹார்- டெல்லி போலீஸாரால் அவர்கள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் டைரக்டர் ஜெனரல் (ஏடிஜி) குண்டன் கிருஷ்ணன் கூறுகையில், “டெல்லியில் கும்பலின் மறைவிடத்தை போலீஸார் சுற்றி வளைத்தபோது இந்த என்கவுன்ட்டர் நடந்தது. இந்தக் கும்பல் ஜூலை 18, 2025 அன்று பாஜ்பட்டியில் ஆதித்ய குமார் கொலை, ஆகஸ்ட் 25, 2025 அன்று தும்ராவில் மதன் குமார் குஷ்வாஹா கொலை, செப்டம்பர் 26, 2025 அன்று தும்ராவில் முன்னாள் பிரம்மர்ஷி சேனா தலைவர் கணேஷ் சர்மா படுகொலை போன்ற பல கொடூரமான செயல்களை செய்துள்ளது. அத்துடன் பெரிய அளவில் பணம் கேட்டு உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளனர்” என்றார். பிஹாரில் தேடப்பட்டு வந்த இந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து கொடுத்தால் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


