காருக்கு பெட்ரோல் நிரப்ப வந்த இடத்தில் ஊழியரை அறைந்த சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டை பங்க் ஊழியர் திருப்பி தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் அஜ்மீர்- பில்வாரா தேசிய நெடுங்சாலையில் ஜஸ்வந்த்புராவில் சிஎன்ஜி பெட்ரோல் பங்க் உள்ளது. அங்கு காரில் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) சோட்டு லால் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒரு காருக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சோட்டுலால் சர்மா, ” நான் தான் இந்த ஊர் எஸ்டிஎம்… முதலில் எனது காருக்கு பெட்ரோல் போடு” என்று கூறியுள்ளார். ஆனால், அதற்கு முன்பு வந்த காருக்கு பெட்ரோல் நிரப்புவதில் ஊழியர் கவனமாக இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சோட்டுலால் சர்மா, அந்த ஊழியரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர், பதிலுக்கு சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டை கன்னத்தில் அறைந்தார். இதனால் இருவருக்குள்ளும் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் பெட்ரோல் பங்கில் இருந்த ஊழியர்கள் தலையிட்டு சமாதானம் செய்ய முயன்றனர். இந்த தகவல் அறிந்த ராயலா காவல் நிலைய போலீஸார், விரைந்து வந்து இருதரப்பையும் பிரித்து விட்டனர்.
விசாரணைக்குப் பிறகு தீபக் மாலி, பிரபுலால் குமாவத் மற்றும் ராஜா சர்மா ஆகிய மூன்று பெட்ரோல் பங்க் ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்த வீடியோவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். எஸ்டிஎம் முதலில் அறையாமல் இருந்திருந்தால் இந்த தகராறு வந்திருக்காது என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இந்த தாக்குதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“ஒரு சாதாரண மனிதர் ஒரு அதிகாரியை அடித்திருந்தால், உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும், ஆனால் ஒரு அதிகாரிக்கு ஏன் எந்த விதிகளும் இல்லை?” என்று பலர் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளனர். பொது இடத்தில் இதுபோன்ற நடத்தை ஒரு அதிகாரிக்கு தகுதியற்றது என்று பொதுமக்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் #BhilwaraSDM மற்றும் #ThappadCase போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. எஸ்டிஎம் சோட்டுலால் சர்மா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. அவர் இதற்கு முன்பு அரசு ஊழியர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதா குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். இந்த நிலையில், அடுத்த சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார்.


