வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து நீடிக்கிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையாமல், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே கரையைக் கடக்கும்; இதனால் அதீத கனமழைக்கான வாய்ப்புகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று (அக்டோபர் 23) வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று (அக்டோபர் 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


