பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்து வெடித்து சிதறியதில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் வெடித்து விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நைஜீரியா மக்கள் எரிபொருள் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் விபத்திற்குள்ளாகும் போது அதில் இருந்து எரிபொருளை சேகரிக்கச் செல்லும் போது உயிரிழக்கும் சம்பவம் தொடர்கிறது. இந்த ஆண்டு ஜனவரியில், நைஜர் மாகாணத்தில் டேங்கர் லாரி விபத்தைத் தொடர்ந்து எரிபொருள் சேகரிக்க சென்ற 98 பேர் உயிரிழந்த சோகம் நடைபெற்றது.
தற்போது அதே நைஜர் மாகாணத்தில் மீண்டும் அதே போல ஒரு விபத்து நடைபெற்றுள்ளது. நைஜீரியாவின் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு டேங்கர் லாரியில் பெட்ரோல் நேற்று கொண்டு செல்லப்பட்டது. கட்சா பகுதியில் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாடை இழந்த டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அப்போது அப்பகுதி மக்கள் சாலையில் கொட்டிய பெட்ரோலை சேகரிக்க திரண்டனர்.
அப்போது திடீரென டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது. இதில் சாலையில் நின்றவர்கள், பெட்ரோல் சேகரிக்கச் சென்றவர்கள், வாகனங்களில் சென்றவர்கள் என 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்த மாநில அவசரகால அமைப்பின் தலைவர் ஹுசைனி இசா கூறுகையில், டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். எரிபொருளை எடுக்க பொதுமக்கள் சென்ற போது டேங்கர் லாரி வெடித்து அவர்கள் எரிந்து உயிரிழந்துள்ளனர் என்றார். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


