ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான தவெக உறுப்பினர் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் தண்டுரை பகுதியில் நாட்டு வெடி, பட்டாசுகளை ஆறுமுகம், அவரது மகன் விஜய் தயாரித்து வந்தனர். தீபாவளிக்கு முதல்நாளான அக்.19-ம் தேதி நாட்டு வெடி வெடித்து வீடு இடிந்து விழுந்தது. இதில், பட்டாசு வாங்க வந்த யாசின்(25), சுனில் பிரகாஷ் (23), சுமன் (22), சஞ்சய் (22) ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த போது நாட்டு வெடிகளை விற்பனை செய்த ஆறுமுகம், அவரது மகன் விஜய் மற்றும் விஜய்யின் நண்பர் தாமோதரன் ஆகிய 3 பேரும் உயிர் தப்பியது தெரிய வந்தது. இவர்கள் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக பட்டாசு, நாட்டு வெடிகளை தயாரித்தது தெரிய வந்தது. இதற்காக கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் இருந்து வெடிமருந்துகளை வாங்கி வந்து பட்டாசுகளை தயாரித்துள்ளனர்.
சட்டவிரோதமாக வெடிகளை தயாரித்த ஆறுமுகம், தமோதரன் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த விஜய்யை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த விஜய்யை, பட்டாபிராம் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு வெடி செய்ய மருந்து பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது, வெடிகளை தயாரித்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸார் தேடி வந்த முக்கிய குற்றவாளியான விஜய், தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக உள்ளார் எனக் கூறப்படுகிறது.


