தன் பெயரில் நற்பணி மன்றம் தொடங்கியவர்களுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அட்வைஸ் செய்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில், ‘அண்ணாமலை நற்பணி மன்றம்’ என்ற பெயரில் அமைப்பை பாளையங்கோட்டை அருகே உள்ள அரியகுளம் பகுதியைச் சேர்ந்த வேல்கண்ணன் தொடங்கியுள்ளார். அண்ணாமலை நற்பணி மன்ற தலைவராக தன்னை பிரகடனப்படுத்தியுள்ள வேல்கண்ணன், மன்றக் கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். வெள்ளை நிறத்தில் உள்ள கொடியின் நடுவே அண்ணாமலை படம், அதனைச் சுற்றி வட்டவடிவில் அண்ணாமலை நற்பணி மன்றம், திருநெல்வேலி மாவட்டம் என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.
அண்ணாமலைக்கு நற்பணி மன்றம் தொடங்கியுள்ள வேல்கண்ணன், ஏற்கெனவே பாஜகவில் மாவட்ட ஆன்மீக பிரிவு தலைவராக இருந்தவர். தற்போது அவருக்கு கட்சியில் பதவி வழங்கப்படாததால், அண்ணாமலை பெயரில் நற்பணி மன்றத்தை தொடங்கியதக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் பதவி பறிக்கப்பட்ட அண்ணாமலை மீது பாஜக கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், திருநெல்வேலியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அண்ணாமலை நற்பணி மன்றம் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு, வணக்கம். இன்றைய தினம் திருநெல்வேலியில் என் பெயரில் நற்பணி மன்றம் அமைத்து கொடி அறிமுகம் செய்துள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டு இருக்கிறேன். எனினும், இது போன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.
எனவே, தயவுசெய்து என்னுடைய பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் இது போன்ற செயல்களை உடனடியாக கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். வருங்காலத்திலும் இத்தகைய செயல்பாடுகளை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். சுவர் இருந்தால் தான் சித்திரம். எனவே அனைவரும் முதலில் உங்களுடைய வாழ்க்கைக்கும், உங்கள் குடும்பத்தினர் நலனை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆதரவுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்று கூறியுள்ளார்.


