உடல்நலக்குறைவு காரணமாக அப்பலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸை அன்புமணி பார்க்க முடியவில்லை என்று கூறிய நிலையில், டாக்டர் ராமதாஸ் சிகிச்சை பெறும் அறையில் இருக்கும் புகைப்படங்களை ஜி.கே.மணி வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் நடைபெற்று வரும் அதிகார மோதலால் கட்சி இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகிறது. இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்ட செயாளர்கள் கூட்டம் என டாக்டர் ராமதாஸ் பிஸியாகவே இருந்தார். இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் ராமதாஸ் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட ராமதாஸ்க்கு இன்று கலை ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸை இன்று காலை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்க அன்புமணி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு டாக்டர்களிடம் ராமதாஸ் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
இதன்பின் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறுகையில், “அய்யாவிற்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரை பார்க்கமுடியவில்லை” என்று கூறியிருந்தார். இந்நிலையில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ராமதாஸுடனே இருந்து அவரை பார்த்து வருவதாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜி.கே.மணி புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில், “மருத்துவர் அய்யா உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார். மருத்துவர்கள் ஆரோக்கியமுடன் உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து உடனிருந்து பார்த்துக் கொண்டுவருகிறேன்‘ என்று கூறியுள்ளார். டாக்டர் ராமதாஸை அவரது மனைவி சரஸ்வதி உள்ளிட்டோரும் உடனிருந்து கவனித்து வருகின்றனர். ஜி.கே.மணி வெளியிட்ட இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதால் பார்க்க முடியவில்லை என்று அன்புமணி கூறியதால், டாக்டர் ராமதாஸை பார்க்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதா என்ற கேள்வி பாமகவினரிடையே எழுந்துள்ளது. அன்புமணியை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று டாக்டர் ராமதாஸ் கூறினாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


