கரூரில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில், சேலம் ஏற்காட்டில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் சம்பவம் :
கடந்த சனிக்கிழமை கரூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தச் சம்பவ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
தவெக நிர்வாகிகள் மீது வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் போலீசார், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 2 கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு
இந்நிலையில் இச்சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட தமிழக காவல்துறையினர், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து அறிந்து கொண்ட அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். போலீசாரும் தனிப்படை அமைத்து அவரைத் தேடி வருகிறார்கள்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அவர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஒரு தனிப்படையினர் ஏற்காட்டில் முகாமிட்டு புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறார்கள்.


