கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினியின் கார் இன்று விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்க தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நடிகை ஹேமமாலினி தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் இன்று விமானம் மூலம் கோவை வந்தனர்.அப்போது குழுவின் தலைவர் ஹேமாமாலினி, குழு உறுப்பினர் அனுராக் தாகூர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது ஹேமமாலினி கூறுகையில், “கரூர் சம்பவத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவிக்க வந்திருக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க உள்ளோம். கரூர் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக விசாரித்த பிறகு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம்” என்றார்.
அனுராக் தாகூர் கூறுகையில் ” கரூரில் சம்பவத்தில் உயிரிழந்த 41 குடும்பங்களையும் சந்திக்க உள்ளோம். இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது. இந்த படிப்பினைகளை கொண்டு இனிவரும் காலங்களில் இப்படி நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாதிரியான சூழல் ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகளிடமும் பேச உள்ளோம்” என்றார்.
இதன் பின், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் குழு கார்கள் மூலம் கரூர் சென்றனர். அப்போது அவர்களது கார் அடுத்தடுத்து மோதிக் கொண்டது. சின்னியம் பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் பகுதியில் விபத்து ஏற்பட்ட நிலையில் ஹேமமாலினி சென்ற காரின் பின்பகுதியில் லேசாக சேதமடைந்தது. ஹேமமாலினியின் காருக்கு பின்னால் வந்த மற்றொரு காரின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


