கூகுளில் முட்டாள் என்று தேடினால் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் படம் ஏன் வருகிறது என்பது குறித்து சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.
உலகம் முழுவதும் இணையத்தில் தேடுவதற்கு கூகுள் தளத்தை தான் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். நம் எதைத் தேடுகிறோமோ அதை புரிந்து கொண்டு கூகுள் அதற்கானப் பதிலைத் தருகிறது. இதற்குப் பின்னால் இருப்பது மனிதர்களா அல்லது தொழில்நுட்பமா என்று சாதாரண மக்கள் சந்தேகப்படுவதுண்டு. இந்த சந்தேகம் மெத்த படித்த மேதாவிகளுக்கும் வந்துள்ளது. அதற்குக் காரணம் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப். கூகுளில் முட்டாள் என்று தேடினால் அதற்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் படம் வருவது தான் அதற்கு காரணமாகும்.
கடந்த சில ஆண்டுகளாக தனக்கு எதிராகவும், தனது கட்சிக்கு எதிராகவும் கூகுள் தவறான தகவல்களை வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் பகிரங்க குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா நாடாளுமன்றத்தின் நீதித்துறைக்கான குழு விளக்கம் கேட்டிருந்தது.
அதற்கு கூகுளின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார். அதில், ” இணையத்தில் தேடப்படும் எந்த ஒரு விஷயத்திற்கும் மனிதர்களால் பதில் அளிக்கப்படுவதில்லை.கூகுள் தளம், மக்கள் இணையத்தில் சேர்க்கும், தேடும், பதிவேற்றம் செய்யும் ஆயிரக்கணக்கான கீவேர்டு எனப்படும் வார்த்தைகளை, புகைப்படங்களை ஸ்கேன் செய்து வைத்திருக்கும். பிறகு தேடப்படும் வார்த்தையுடன் தொடர்புடையவற்றை, ஏற்கெனவே சேகரித்து வைத்திருப்பதிலிருந்து தொகுத்து வழங்கும்.
இணையத்தில் மக்கள் என்ன பதிவேற்றம் செய்கிறார்களோ அதையே வெளிப்படுத்தும். கூகுள் சொந்தமாக எந்த கருத்தையும் உருவாக்குவதில்லை. கடந்த ஆண்டு மட்டும் 3 லட்சம் கோடிக்கும் அதிகமான தேடுதல்கள் நடந்துள்ளன. அவற்றையெல்லாம் எந்த மனிதராலும் தேடி முடிவுகளை வழங்க முடியாது” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.


