
தமிழ்நாடு முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசும்போதே விஜய்யை பாஜக தான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது சுற்றுப் பயணங்களின் போது சினிமாவில் பேசுவதை போல் பேசுகிறார் அகந்தையோடு அவர் பேசி வருகிறார். விஜய்க்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லித்தான் புஸ்ஸி ஆனந்த் மூலம் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். பின்புலத்தில் அமித்ஷா பாஜக இருக்கும் தைரியத்தில் தான் விஜய் அகந்தையோடு கூட்டங்களில் பேசுகிறார். தமிழ்நாடு முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசுவதில் இருந்தே பாஜக தான் விஜய்யை இயக்குகிறது என்பது தெரிய வருகிறது. முதலமைச்சரை பிரதமரை விமர்சிக்கும் போது கண்ணியத்துடன், கவனத்துடன் பேச வேண்டும்.
‘ஒய் பாதுகாப்பு கேட்காமலே கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். நான் ஒரு பிரசாரத்திற்கு வந்தால் இவ்வளவு நிபந்தனை போடுகிறீர்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ பிரசாரத்திற்கு வந்தால் இப்படி நிபந்தனை போடுவீர்களா? சி.எம். சார் போட்டு பாருங்களேன்’ என்று விஜய் சொல்வதிலிருந்தே அவர்கள்தான் இயக்குகிறார்கள் என்பது தெரிகிறது.
விஜய்க்கு அரசியலில் அரிச்சுவடு தெரியாது என்று நினைக்கிறேன். விஜய் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார். இதை மக்கள் விரும்பவில்லை. தமிழக வெற்றி கழகத்தைக் கண்டு பயப்படுபவர்களுக்கு தான் பயம் வரவேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. இவரைப்போல தலைவா படப்பிரச்னைக்காக மூன்று நாட்கள் கொடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்கள் அல்ல. மத்திய அரசு கொடுக்கும் நிதியை கொடுக்கவேண்டும். மாற்றான் தாய் மனபாண்மையோடு தமிழகத்தை அனுகக்கூடாது. ஆளுநர் எதனையும் தெரியாமல் எழுதி கொடுப்பதை பேசுகிறார் என்றார்.