
நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரை உத்தரப்பிரதேச அதிரடிப்படை போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் நடிகை திஷா பதானி. இவர் தெலுங்கில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘லோபர்’ திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘எம்.எஸ்.தோனி- தி அன்டோல்டு ஸ்டோரி’ திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இதனைதொடர்ந்து பாலிவுட் திரை உலகில் பல படங்களில் அவர் நடித்து வந்தார். இவர் வீட்டில் கடந்த 13-ம் தேதி அதிகாலை ஒரு மர்மக்கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஆனால், யாரும் காயமடையவில்லை. இதையடுத்து திஷா பதானி வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு கோல்டி பிரார் கூட்டத்தைச் சேர்ந்த வீரேந்திர சவான் என்பவர் பொற்றுப்பேற்றார்.
இது தொடர்பாக வீரேந்திர சவான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,‘‘ நாங்கள்தான் திஷா பதானியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினோம். திஷா பதானி நமது மரியாதைக்குரிய இந்து துறவிகளை அவமதித்துள்ளார். இது ஒரு டிரெய்லர் மட்டுமே. அடுத்த முறை அவரோ அல்லது வேறு யாரோ நம் மதத்தை அவமதித்தால் அவர்கள் வீட்டில் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்’ என்று பதிவிட்டிருந்தார். இந்து மதத்துறவிகளான பிரேமானந்த் மகாராஜ், அனிருத்தார்ச்சார்யா ஆகியோர் குறித்து திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி கருத்து தெரிவித்திருந்தார். இதன் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக தெரிய வந்தது. குஷ்பு பதானி இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். அவரது தந்தை ஜெகதீஷ் பதானி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாவார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ், காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து டெல்லி போலீஸார், உத்தரப்பரதேசம் மற்றும ஹரியாணா சிறப்பு போலீஸ் படையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் டிரோனிக்கா சிட்டியில் துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற சிறப்பு போலீஸ் படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் இருவர் படுகாயமடைந்தனர். அவர்களை காஜியாபாத்தின் லோனியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர்கள் உயிரிழந்தனர். விசாரணையில், அவர்கள் ஹரியாணா மாநிலம் ம் ரோஹ்தக்கைச் சேர்ந்த ரவீந்திரன் என்ற கல்லு, சோனிபட்டைச் சேர்ந்த அருண் என்பது தெரிய வந்தது. இவர்கள் ரோஹித் கோதாரா – கோல்டி பிரார் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 13 -ம் தேதி பரேலியில் உள்ள திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவரும் நேரடியாக ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப்படை போலீஸார் மீட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.