
வன்னியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீட்டை வழங்காத திமுக அரசை கண்டித்து டிசம்பர்17-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1267 நாள்களாகும் நிலையில், வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. வன்னியர்களுக்கு இன்று வரை முழுமையான சமூகநீதி கிடைக்காததற்கான காரணம் திமுக அரசு தான்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1980-ம் ஆண்டு தொடங்கி 1989-ம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான அறப் போராட்டங்களை மருத்துவர் அய்யா முன்னெடுத்தார். அந்தப் போராட்டங்களின் ஒரு கட்டமாக 1987-ம் ஆண்டு இதே நாளில் ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தை மருத்துவர் அய்யா தொடங்கினார். இந்தப் போராட்டத்தில் அரசு காவல்துறையை ஏவி நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் அப்பாவி வன்னியர்கள் 21 பேர் கொல்லப்பட்டனர்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது 12.12.1988-ம் நாள் ஆளுனரால் பிறப்பிக்கப்பட்டிருந்த அரசாணையை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மருத்துவர் அய்யாவை அழைத்துப் பேசிய அன்றைய முதலமைச்சர் கலைஞர், வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார்.
ஆனால், வேறு சிலரின் ஆலோசனைப்படி, இரவோடு இரவாக தமது முடிவை மாற்றிக் கொண்ட அன்றைய முதலமைச்சர் கலைஞர், வன்னியர்களுடன் மேலும் 107 சாதிகளைச் சேர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை உருவாக்கி அதற்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். அன்றைக்கு அழுக வைத்துக் கொடுக்கப்பட்ட கனி தான் இன்று வரை வன்னிய மக்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைக்காததற்கு காரணமாகும்.
இடஒதுக்கீடு பெற்று 32 ஆண்டுகளாகியும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய மக்களுக்கு முன்னேற்றம் கிடைக்காததால் தான் 2020-21-ம் ஆண்டில் மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்து, அதிமுக ஆட்சியில் 10.50 சதவீத உள் இடஒதுக்கீடு பெறப்பட்டது. ஆனால், சமூகநீதி பகைவர்கள் சிலர் அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கால் வன்னியர் உள் ஒதுக்கீடு செல்லாமல் போனது.
எனினும், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு பெற எல்லா உரிமைகளும் உள்ளது என்று கூறி, உரிய தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2022 மார்ச் 31-ம் நாள் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. தமிழக அரசு நினைத்திருந்தால், அதிகபட்சமாக ஒரு மாதத்தில் தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1267 நாட்களாகியும் இன்று வரை வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை.
பாமக நினைத்திருந்தால் போராட்டங்களை நடத்தி, வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எப்போதோ வென்றெடுத்திருக்கலாம். ஆனால், திமுக அரசு இடஒதுக்கீட்டை வழங்கும் என்று நம்பி தான் ஏமாந்தோம். இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான் இப்போது சிறை நிரப்பும் போராட்டம் என்ற ஆயுதத்தை நாம் கைகளில் எடுத்திருக்கிறோம். இனி இடஒதுக்கீட்டை வென்றெடுக்காமல் ஒருபோதும் பாமக ஓயாது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1267 நாட்களாகியும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்தும், இனியாவது சமூகநீதி துரோகத்தைக் கைவிட்டு வன்னியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியும் டிசம்பர் 17-ம் தேதி புதன்கிழமை காலை 11.00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புரீதியிலான அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.