
தமிழக அரசியலில், தற்போது பரபரப்பாக பேசப்படும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் டாக்டர் அன்புமணியை பாமகவில் இருந்து முழுவதுமாக நீக்கியது, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையையும், அக்கட்சியின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
ராமதாஸ் குடும்பத்தினர் மீதுள்ள குற்றச்சாட்டு
பாமக என்ற கட்சியைப் பயன்படுத்தி அப்பா, மகன் இருவரும், அவர்களின் குடும்பத்தினரும் நன்றாக சம்பாதித்து விட்டார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்புகள், கல்வி, திருமண உதவி கிடைக்கும் என்று நிறையச் சொன்னார்கள். ஆனால், அப்பாவும், மகனும் கட்சியை வைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மறைமுகமாக தமிழ்நாட்டிலும், வெளிமாநிலங்களிலும், வெளிநாட்டிலும் சேர்த்து விட்டார்கள் என்று அவர்கள் சமூக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், தற்போது ஏற்பட்டுள்ள அப்பா – மகன் சண்டை வெறும் நாடகம் தான் என்றும், 2026-ம் ஆண்டு தேர்தல் நெருங்கும் போது இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற இந்த செய்தியும் வர தான் போகிறது என்று பாமகவினர் பேசிக்கொள்கிறார்கள்.
விரிசல் ஆரம்பித்த இடம்
விழுப்புரம் பாமக கூட்டத்தில், தனது மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் பரசுராமனை, அதாவது தனது பேரனை பாமகவின் இளைஞரணி தலைவராக ராமதாஸ் பொறுப்பு வழங்கியதற்கு அன்புமணி கடுமையாக எதிர்த்தார். அந்தக் கூட்டத்தில் அப்பா ராமதாஸ்க்கும், மகன் அன்புமணிக்கும் இடையே வார்த்தைகளில் சண்டை முற்றியது.
“அவர் ஒன்னு பேச; இவர் ஒன்னு பேசு” என சண்டை பெரிதானது. அன்புமணி ஒன்னு சொல்ல.. அதற்கு ராமதாஸ் “நான் தான் தலைவர், நான் சொல்வதை தான் கேட்கனும், விருப்பம் இல்லாதவங்க கட்சியை விட்டு வெளியே போகலாம்..” என்று ஒரே போடாக போட்டார், இதனால் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அன்புமணியின் வம்புகள்
“ எனக்கு சென்னை பனையூரில் ஒரு அலுவலகம் இருக்கிறது. அங்கு வந்து, கட்சி நிர்வாகிகள் என்னைப் பார்க்கலாம்… என் போன் நம்பரை எடுத்துக்கோங்க..” என்று மேடையில் அன்புமணி பேசிவிட்டு கோபமாக சென்றுவிட்டார். இப்படியாக, தந்தை-மகன் சண்டை வீதிக்கு வந்து விட்டது. அதன்பிறகு இருவரையும் பாமக நிர்வாகிகள், ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட அரசியல் முக்கிய பிரமுகர்கள் சமாதானப்படுத்த முயன்ற கதையெல்லாம் பல மாதங்கள் நீடித்தது.
அன்புமணியும் பல சொத்துகளும்!
சென்னை பனையூரில் சொகுசு பங்களா, சென்னை டி.நகரில் கோடிக்கணக்கிலான விலை உயர்ந்த வீடு, பல சொகுசு கார்கள், கிலோ கணக்கில் தங்க நகைகள் (கணக்கில் உள்ளது), கோடிக்கணக்கில் வைர நகைகள், இதுமட்டுமில்லாமல் அன்புமணி- சௌமியா தம்பதிக்கு 3 பெண் பிள்ளைகளில், ஒருவருக்கு மட்டும் தான் இன்னும் திருமணமாகவில்லை. திருமணமான இரு பெண்கள் கைவசமும் விலை உயர்ந்த தங்கம், வைர நகைகள் வைத்துள்ளனர் என்று பாமகவினர் மத்தியில் பேசப்படுகிறது.
புள்ளி விவரங்கள்
கடந்த 2024-ம் ஆண்டு தருமபுரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி போட்டியிட்டார். அவர் வேட்புமனு தாக்கலின்போது அளித்த பிரமாணப் பத்திரத்தில், தனக்கு விவசாயம் சார்ந்த வருவாயாக ரூ.28 லட்சம், விவசாயம் சாராத வருவாயாக ரூ.1. 54 கோடி பணம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவை தவிர, 25.90 கிலோ வெள்ளி பொருட்கள்; 2,927 கிராம் தங்க நகைகள் மற்றும் 151.5 கேரட் வைர நகைகள் ஆகியவை இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமகவின் எதிர்காலம் ?
பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த அதிரடி உத்தரவு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சலசலப்பையும், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கட்சியில் உள்ள இளைஞர்கள் தங்களின் அரசியல் பாதை சரிதானா? பாமக கட்சி வருங்காலத்தில் இருக்குமா, இருக்காதா என்ற கேள்விகளுடன் தான் கட்சியில் இருக்கிறார்கள்.
தற்போது ராமதாஸ், தனது மகன் அன்புமணி, அவரது மனைவி சௌமியா என அரசியலில் மொத்தமாக அவரின் குடும்பத்தை ஓரம்கட்டி விட்டு தனது மகள் காந்திமதி குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். “தந்தை-மகன் சேர்ந்தால் பாமகவுக்கு எதிர்காலம் உண்டு; இல்லையென்றால் பாமகவும், கட்சியின் சாதனைகளும், எல்லாம் இறந்த காலமாக மட்டும் தான் இருக்கும்” என்பது தான் பாமகவினரின் கருத்து.