திருப்புவனம் அருகே வைகையாற்றில் ஓட ஓட விரட்டி வாலிபரை கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, தட்டாங்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் (23) மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர், அடுத்த மாதம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
கடந்த 4ம் தேதி இரவு வினோத்குமார் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த டூவீலரை, திருப்பாச்சேத்தி அருகே மார்நாடு கிராமத்தை சேர்ந்த முத்துராமன் உட்பட 3 பேர் திருட முயன்றனர். அவர்களை, வினோத்குமார் கையும், களவுமாக பிடித்து திருப்புவனம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வினோத்குமார், அவரது நண்பர்கள் மயில்ராஜா (24), நவீன்குமார் (23) ஆகியோர் நேற்று இரவு தட்டாங்குளம் விலக்கில் வைகையாற்று பாலத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, டூவீலரில் வந்த மூன்று பேர் கும்பல், ‘யார் வினோத்குமார்’ என கேட்டு விசாரித்து, அவரை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனை தடுக்க வந்த மயில்ராஜா, நவீன்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
அப்போது உயிருக்கு பயந்த வினோத்குமார் வைகையாற்றுக்குள் ஓடினார். அந்த கும்பல் அவரை பின்தொடர்ந்து சென்று ஓட ஓட வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. மயில்ராஜா, நவீன்குமார் ஆகியோர் வெட்டுக்காயத்துடன் வினோத்குமாரை தேடி சென்றபோது, அவர் ஆற்றில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வினோத்குமாரின் தந்தை மணிகண்டன் திருப்புவனம் போலீசில் அளித்த புகாரில், முத்துராமனின் ஆதரவாளர்கள் வெட்டி படுகொலை செய்ததாக தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வினோத்குமாரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள், கிராம மக்கள் 150க்கும் மேற்பட்டோர் திரண்டு தட்டாங்குளத்தில் காலை ராமேஸ்வரம் – மதுரை நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதித்த நிலையில், எஸ்பி சிவபிரசாத், தாசில்தார் ஆனந்த பூபாலன் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டனர்.

More Stories
கோவை விமான நிலைய பெண் அதிகாரி தற்கொலை:
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய் நாளை பதவியேற்பு விழா
தென்னிந்திய நடிகர் நடிகைகளுக்கு பாலிவுட்டில் மரியாதை கிடையாது: நடிகை சிம்ரன் வேதனை…