தமிழக வெற்றிக் கழக அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் தொடர்பான பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் அவர் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற தோற்றம் இருப்பதாக சிலர் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், அதற்கு அமைச்சர் தரப்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், அமைச்சர் சரத்குமார் தனது மொபைல் ஃபோன் திரையின் மீது வெள்ளை நிறப் பொருளை பொடியாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றிருந்த சூழலில், இந்த வீடியோ இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் தரப்பு, அது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய வீடியோ என தெரிவித்துள்ளது. அப்போது ஒன்றரை வயதுடைய தனது குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை குழந்தை விழுங்க முடியாமல் துப்பியதாகவும், அதனை மொபைல் திரையில் வைத்து பொடியாக்கி தண்ணீரில் கலந்து கொடுப்பதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் கேமராக்கள் இருக்கும் திறந்தவெளி மைதானத்தில் யாரும் போதைப்பொருள் பயன்படுத்த மாட்டார்கள் என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் வீடியோ தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் விளக்கத்திற்குப் பிறகும் சமூக வலைதளங்களில் விவாதம் அடங்கவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘THUG LIFE MOMENT’ என்ற தலைப்பில் இந்த வீடியோவை பகிர்ந்திருந்ததாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் குழந்தை அல்லது குழந்தைக்கு மருந்து கொடுக்கும் காட்சிகள் எதுவும் இல்லை என்றும், ஒன்றரை வயது குழந்தையை கூட்ட நெரிசல் மற்றும் அதிக இரைச்சல் நிறைந்த கிரிக்கெட் மைதானத்திற்கு அழைத்துச் சென்றிருப்பார்களா என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைத்து வருகின்றனர். இதனால் வைரல் வீடியோ தொடர்பான சர்ச்சை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது.

More Stories
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு – 4 முனை போட்டி தீவிரம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!