பள்ளி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் இணைந்த அடையாள அட்டை வழங்க திட்டம் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுக்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்தார்.
வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது பள்ளி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் இணைக்கப்பட்ட அடையாள அட்டையை வழங்கப்போவதாக தெரிவித்தார். இதற்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது; “பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் சாதி சான்றிதழ் வாங்குவதற்கு மாற்று நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதற்கென அடையாள அட்டையை வழங்கலாம் என முடிவு செய்துள்ளோம். அதற்கான பணிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், மாணவரின் முகவரி, சாதி சான்றிதழ், இரத்த பிரிவு, ஆதார் அட்டை, தொலைப்பேசி எண் என அனைத்தும் அதில் இணைக்கப்பட்டிருக்கும். முதற்கட்டமாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுவருகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “மாணவர்களிடையே சாதி அடையாளத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்தக் கருத்துக் குறித்து, தமிழ்நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு அமைச்சர் அவர்கள் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அமைச்சரின் இந்தப் பேச்சின் உண்மையான நோக்கம் என்ன? இது அரசின் நிலைப்பாடா? மாணவர்களிடையே சாதி அடையாளத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்தக் கருத்துக் குறித்து, தமிழ்நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு அமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!