September 10, 2026

ஆந்திராவில் கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து:5 பேர் பலி!

ஆந்திராவில் உள்ள கர்னூலில் இன்று அதிகாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில், எம்மிகனூர் தாலுகா கோடேகல் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4,30 மணியளவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனால் கார்களின் முன்புறம் நொறுங்கின. இந்த விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததுடன் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கார்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்பதில் சிரமப்பட்டனர்.

இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தகவலை யெமிகனூர் காவல் துணை ஆய்வாளர் ஸ்ரீனிவாசுலு தெரிவித்தார். இந்த விபத்து குறித்து அவர் கூறுகையில், “விபத்தில் இறந்தவர்களில் இரண்டு பேர் ஆண்கள், ஒருவர் பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள சிக்கஹோசல்லி கிராமத்திலிருந்து மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திர சுவாமி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்” என்றார்.

மேலும் இந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்றார். அதிகாலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed