தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான சூழல் தற்போது நிலவி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தமிழகத்தில் ‘தொங்கு சட்டசபை’ (Hung Assembly) உருவாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் விஜய் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால்.. 107 இடங்கள் மட்டுமே தவெகவிடம் உள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த திமுக 73 இடங்களையும், அதிமுக 53 இடங்களையும் பெற்றுள்ளன. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது.
தற்போதைய சூழலில் திமுக அரசு ஒரு ‘காவந்து’ (Caretaker Government) அரசாகவே செயல்பட்டு வருகிறது. புதிய அரசு பதவியேற்கும் வரை அன்றாட நிர்வாகப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்பதால், முக்கிய கொள்கை முடிவுகளோ
அல்லது புதிய நிதி ஒதுக்கீடுகளோ செய்ய இயலாது. இதனால், திமுக அரசால் தொடங்கப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் இந்த மாதம் வழங்கப்படுமா என்பதில் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த காலங்களில் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிக்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 1,000 ரூபாய் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஆட்சி மாற்றம் நிகழும் வேளையில், நிதித் துறையின் ஒப்புதல் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக இந்த மாதம் உரிமைத் தொகை கிடைப்பது அரிது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மறுபுறம், 108 இடங்களுடன் முன்னிலையில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகம், தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் ‘உதவித் தொகை’ வழங்கப்படும் என்று அதிரடி வாக்குறுதியை அளித்திருந்தது. திமுகவின் 1,000 ரூபாய் திட்டத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தவெக தலைவர் ஏற்கனவே தனது பரப்புரைகளில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு வழங்கும் தொகை வெறும் உரிமைத் தொகையாக இல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கௌரவத் தொகையாக அமையும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறியால் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர். திமுகவின் 1,000 ரூபாய் திட்டம் தொடருமா? தவெக ஆட்சி அமைத்தால் அவர்கள் வாக்குறுதி அளித்த 2,500 ரூபாய் எப்போது கிடைக்கும்? இந்த இடைப்பட்ட காலத்தில் எந்தத் தொகையும் கிடைக்காமல் போகுமா? இவைதான் தற்போது தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கும் கேள்விகளாக உள்ளன. தவெக தற்போது வரை ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்க மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை தவெக தலைமையில் புதிய அரசு அமைந்தால், அவர்கள் தங்கள் திட்டத்தை அமல்படுத்த சில மாதங்கள் ஆகலாம். அதுவரை பழைய திட்டமான 1,000 ரூபாய் நிறுத்தப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக 73 இடங்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பலம் அவர்களிடம் இல்லை. அதிமுகவின் 53 இடங்கள் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளன. இந்த அரசியல் சதுரங்க வேட்டையில், மக்களின் நலத்திட்டங்கள் முடங்கிவிடக்கூடாது என்பதே சாமானிய மக்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழக ஆளுநர் அடுத்தகட்டமாக எந்தக் கட்சிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்பதைப் பொறுத்தே, தமிழகப் பெண்களின் வங்கி கணக்கிற்கு வர வேண்டிய உதவித் தொகையின் எதிர்காலம் முடிவாகும். தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், மகளிர் உரிமைத் தொகை விவகாரம் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

More Stories
தவெக தலைவர் விஜய்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து!
லைவ் நிகழ்ச்சியிலேயே குத்தாட்டம் போட்ட ‘ஆக்சிஸ் மை இந்தியா’ பிரதீப் குப்தா!
அரசியலில் சாதித்த லாட்டரி மார்ட்டின் குடும்பம் – டோட்டல் ஃபேமிலி எம்எல்ஏ!