VK Promotion’ நிறுவனத்தின் அடுத்த மெகா மோசடி அம்பலம்! கட்டுக் கட்டாகப் பணம்; முதல்வர் விஜய் படம் துஷ்பிரயோகம்! அமலாக்கத்துறை பாயுமா?

கோவை :

தமிழகத்தில் எளிய மக்களைக் குறிவைத்து, கோடிக் கணக்கில் நிதி திரட்டி வரும் ‘VK Promotion’ நிறுவனத்தின் அடுத்தடுத்த அதிர்ச்சியூட்டும் மோசடி உத்திகள் தற்பொழுது அம்பலமாகியுள்ளன. குறிப்பாக, அரசியல் கட்சித் தலைவர்களின் முகத்திரையைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது குறித்தும், அவர்கள் காட்டும் கோடிக்கணக்கான ரொக்கப் பணம் குறித்தும் அமலாக்கத்துறை (ED) மற்றும் காவல்துறை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

​சமூக வலைதளத்தில் கட்டுக் கட்டாகப் பணம்: வலையில் விழும் பொதுமக்கள்!

​‘VK Promotion’ நிறுவனம் தனது முகநூல் (Facebook) மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில், லட்சக்கணக்கில் மற்றும் கோடிக்கணக்கில் பணத்தைக் கட்டுக் கட்டாக வைத்து எண்ணும் வீடியோக்களைப் பதிவிட்டு வைரலாக்கி வருகிறது. புதிய கிளைகளை (Franchise) ஆரம்பிக்கப் பொதுமக்களிடம் இருந்து தலா ரூ. 5 லட்சம் வரை முழுமையாக ரொக்கமாக (Cash) வாங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

​இந்தியச் சட்டப்படி, இவ்வளவு பெரிய தொகையை ரொக்கமாகப் பரிவர்த்தனை செய்வது முற்றிலும் சட்டவிரோதமானது. இந்தத் தொகைகள் எந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன? இதன் பின்னணியில் நடப்பது கருப்புப் பணப் பரிவர்த்தனையா? என்பது குறித்து மத்திய அமலாக்கத்துறை (ED) உடனடியாகத் தீவிர விசாரணை நடத்திச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் முதன்மையான எதிர்பார்ப்பாக உள்ளது.

​த.வெ.க மற்றும் விஜய் படத்தைத் துஷ்பிரயோகம் செய்து ரியல் எஸ்டேட் விளம்பரம்?

​பொதுமக்கள் மத்தியில் எளிதில் நம்பிக்கையை உண்டாக்க வேண்டும் என்பதற்காக, த.வெ.க பிரமுகரான ‘VK Promotion’ வெற்றி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் விளம்பரங்களைச் செய்யும்போது தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவரான முதல்வர்  விஜய் அவர்களின் புகைப்படத்தைப் பின்னணியில் காட்டி விளம்பரம் செய்து மக்களைத் தனது மோசடி வலையில் சிக்க வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

​அரசியல் செல்வாக்கையும், தலைவர்களின் முகத்தையும் காட்டி, வணிக ரீதியாக மக்களை ஏமாற்றும் இந்த உத்தி குறித்துச் சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையும், காவல்துறையும் கவனிக்கத் தவறுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

​ஆதரவற்றோர் இல்லம்: மக்கள் பார்வைக்கு ஆவணங்கள் வருமா?

​தமிழகம் முழுவதும் ஆதரவற்றோர்க்கு இல்லம் உருவாக்கப் போவதாகப் பேசி வரும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வெற்றி, உண்மையில் அதற்கான முறையான அரசு அனுமதிகளையும், சொத்து ஆவணங்களையும் பெற்றுள்ளாரா? அல்லது இதைப் பயன்படுத்திப் பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யத் திட்டமிடுகிறாரா? அவ்வாறு ஆதரவற்றோர்க்கு இல்லம் ஆரம்பித்தால், அது குறித்த ஆவணங்களை மக்கள் பார்வைக்கு வைக்கத் தயாரா? என்று சமூக ஆர்வலர்கள் பகிரங்கக் கேள்வி எழுப்புகின்றனர்.

​ஜியோ நியூஸ் தமிழ் செய்தி எதிரொலி: வீடியோக்களை அவசர அவசரமாக அழித்த ‘VK Promotion’!

​மிக முக்கியமாக, ‘VK Promotion’ நிறுவனத்தின் ரிசர்வ் வங்கி (RBI) விதிமீறல்கள் குறித்து ஜியோ நியூஸ் தமிழ் தொடர்ந்து புலனாய்வுச் செய்திகளை வெளியிட ஆரம்பித்தது முதல், பதற்றமடைந்த அந்த நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்த பல அசைக்க முடியாத “ஆதார வீடியோக்களை” அவசர அவசரமாக அழித்து  வருகிறது.

​செய்திக்கு ரியாக்ஷன் காட்டாமல் மௌனம் காப்பதாக வெளியில் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் ஆதாரங்களை அழிக்கும் வேலையில் அவர்கள் இறங்கியிருப்பது, ஜியோ நியூஸ் தமிழின் செய்திக்கான முதல் வெற்றியாகவும், அவர்களின் தவறை அவர்களே ஒப்புக்கொண்டதற்கான சான்றாகவும் அமைந்துள்ளது.

​தமிழக அரசு, பொதுமக்களைக் காப்பாற்றுங்கள்!

​தமிழகத்தில் கடந்த காலங்களில் நடந்த பல்வேறு நிதி நிறுவன மோசடிகளில் சிக்கி பொதுமக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்து தவித்தது போல, மீண்டும் ஒரு மோசடியில் சிக்கித் தவிக்கும் முன், தமிழக அரசு, மாநில உளவுத்துறை மற்றும் உள்ளூர் காவல்துறை உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும்.கோவையை தலைமையிடமாக கொண்டுதமிகம் முழுவதும் செயல்படும் ‘VK Promotion’ நிறுவனம் சட்டப்படி பதிவு பெற்றதா, பண வரவு RBI வழிகாட்டுதல்படி நடக்கிறதா என்பதைத் தீர விசாரித்துப் பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

​மாற்றுத்திறனாளிகளின் நேரடி ஆடியோ அம்பலம்!

​‘VK Promotion’ நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மைக் குரல்களும், மாற்றுத்திறனாளிகளை வைத்து உதவி செய்வது போல நடத்திய நாடகத்திற்குப் பின்னால், தங்களுக்கு ‘VK Promotion’ வெற்றி எதையும் செய்யவில்லை என்று அந்த மாற்றுத்திறனாளிகளே நேரடியாகக் கண்ணீருடன் பேசும் அசைக்க முடியாத ஆடியோ ஆதாரங்களும் அடுத்த பகுதியில் விரிவாக வெளியாகவுள்ளது!  

VK Promotion’ நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது இது குறித்துக் கூடுதல் விவரங்கள் அறிந்தவர்கள், தங்களின் தகுந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் ஜியோ நியூஸ் தமிழ் செய்திப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம். மக்களின் குரலை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல நாங்கள் தயாராக உள்ளோம். (ஆதாரங்கள் அளிப்போரின் விவரங்கள் முற்றிலும் இரகசியமாக வைக்கப்படும்).