கீழடியில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வின்போது ட்ரோன் சர்ச்சை; தடையை மீறி தவெகவினர் அத்துமீறியதாக குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைந்துள்ள திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் 11ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வரும் பகுதிகளை தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அகழாய்வுப் பணிகள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் பார்வையாளர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் விவரங்களை கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, திறந்தவெளி அருங்காட்சியக வளாகத்தில் ட்ரோன் கேமரா பயன்படுத்த தடை அமலில் இருந்தபோதிலும், அமைச்சருடன் வந்ததாகக் கூறப்படும் தவெக நிர்வாகிகள் சிலர் தடையை மீறி ட்ரோனைப் பறக்கவிட்டு வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிட ரீல்ஸ் தயாரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட தளங்களில் விதிமுறைகள் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், விதிமீறல் தொடர்பாக அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், அமைச்சர் ராஜ்மோகன் மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள சமணர் படுகையையும் பார்வையிட்டு, அங்குள்ள தமிழி கல்வெட்டுகள் மற்றும் தொன்மைச் சின்னங்களை ஆய்வு செய்தார். எனினும், ட்ரோன் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.