திருச்செந்தூர்:
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பகுதியில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் திடீரென உள்வாங்கியது.
செய்தி விவரம்:
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களின் முன்னும் பின்னும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடல் நீர்மட்டம் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வாகும். அந்த வகையில், ஆடி அமாவாசை தினமான நேற்று காலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரபதி வரையிலான கடலோரப் பகுதியில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது.
கடல் நீர் உள்வாங்கியதால், வழக்கமாக நீரில் மூழ்கியிருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இருப்பினும், கடற்கரைக்கு வந்த பக்தர்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடினர். மேலும், வெளித்த தெரிந்த பாறைப் பகுதிகளில் நின்று பக்தர்கள் பலர் செல்போனில் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர், மாலையில் கடல் நீர் படிப்படியாக உயர்ந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
கடல் உள்வாங்குவதற்கான காரணம் என்ன?
இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி நிலவியல் துறை உதவி பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான செல்வம் தெரிவிக்கையில்:
- இயற்கை மாற்றம்: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் காரணமாகக் கடல் அலைகளின் வேகம் மற்றும் உயரத்தில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் வழக்கமாகவே கடல் நீர்மட்டம் உயர்வதும் தாழ்வதும் இயல்பான ஒன்றாகும்.
- நில அமைப்பு: தூத்துக்குடி மாவட்டக் கடற்கரையின் நில அமைப்பைப் பொறுத்தவரை, அது மேடான பகுதியாகவும், முனை போன்று கடலுக்குள் நீட்டிக்கொண்டும் அமைந்துள்ளது. இதனால் கடல் அலைகள் அப்பகுதியில் உள்வளைந்து செல்லும்.
- சாதாரண நிகழ்வே: இத்தகைய நில அமைப்பின் காரணமாக, அமாவாசை நாட்களில் வழக்கம்போல் நீர்மட்டம் குறையும் போது, மேடான பகுதி வெளியே தெரிந்து கடல் அதிக தூரம் உள்வாங்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை; இது முற்றிலும் சாதாரணமான ஒரு இயற்கை நிகழ்வே ஆகும்.

More Stories
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!
கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை செய்து மிரட்டல்: தென்காசி கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புதிய திட்டம் தொடக்கம்!