மதுரை: மதுரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் எல்.இ.டி. பெயர் பலகையில் சர்ச்சைக்குரிய வாசகம் இடம்பெற்ற சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் வழித்தடப் பலகையில், ஊரின் பெயருக்குப் பதிலாக “Madurai Payalugada.. Horror…” (மதுரை பயலுகடா.. கொடூரமடா…) என்ற வாசகம் ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகியுள்ளது. இதனைப் பார்த்த பயணிகள், அந்தப் பேருந்து எந்த ஊருக்குச் செல்கிறது என்பதை அறிய முடியாமல் குழப்பமடைந்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சமீபகாலமாக அரசுப் பேருந்துகளில் உள்ள எல்.இ.டி. பெயர் பலகைகளின் தொழில்நுட்ப அமைப்புகளை மர்ம நபர்கள் ஹேக் செய்தோ அல்லது தவறாக மாற்றியோ, ஊர் பெயர்களுக்குப் பதிலாக வேறு தேவையில்லாத வார்த்தைகளை இடம்பெறச் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
எனவே, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும், எல்.இ.டி. திரைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!