கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரியசிறுவத்தூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், போதையில் பாட்டிலை போட்டு உடைத்து இளைஞர் அலப்பறை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, 700 க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன. பல்வேறு பகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மதுக் கடைகளையும் அகற்ற கோரிக்கை விடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், டாஸ்மாக் கடை ஊழியர்கள் மற்றும் மதுப்பிரியர்கள் மதுக் கடையை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரியசிறுவத்தூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இதற்கு அப்பகுதி மதுப்பிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆவேசமாக பாட்டிலை உடைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த இளைஞர் மற்றும் சிலர் மது போதையில், இந்த ஒயின்ஷாப்பை எடுக்கக் கூடாது, எதுக்கு எடுக்கணும். ஓட்டு போட்டது நாங்க.. நாங்க எங்க போவோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழகத்தை பாண்டிச்சேரி மாதிரி ஆக்க வேண்டும் என்றும் ஆவேசமாக கூறினர்.
அதேநேரத்தில்டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளியின் அருகில் இங்கு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பிள்ளைகள் படித்து விட்டு அந்த சாலை வழியாக வீட்டுக்கு வர முடிவதில்லை. மதுப்பிரியர்கள் மிகவும் அட்டகாசம் செய்கின்றனர். இதனால், விபத்துகளும் அதிகளவில் நடைபெறுகின்றன. வீட்டில் காசு, பணம் கூட வைக்க முடிவதில்லை. சிறிய சிறிய பிள்ளைகள் எல்லாம் இவ்வழியாக பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லவே பயப்படுகின்றனர். குடித்து விட்டு கலாட்டா செய்வது, வாகனங்களில் இடிக்க வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த கடையால் இளைஞர்கள் 10 பேர் குடித்துவிட்டு உயிரிழந்துள்ளனர். இரண்டு பள்ளிகளுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக்கினால் பொதுமக்கள், மாணவி, மாணவிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 5 வருடமாக மனு அளித்தும் இந்த கடை அகற்றப்படவில்லை. சிறுவத்தூர் கடையை தூக்கினாலே அடுத்த தேர்தலிலும் உங்களையே முதலமைச்சராக்குவோம் என்று கூறினர். அப்பகுதி பெண் ஒருவர் கூறுகையில், பெரியசிறுவத்தூர் பகுதியில் பள்ளி மாணவர்கள் குடித்துவிட்டு அட்டகாசம் செய்கின்றனர். எனது மகன், அவரைத் தொடர்ந்து எனது வீட்டுக்காரர் என குடிப் பழக்கத்தால் இறந்து விட்டனர்.
எனவே, இந்த டாஸ்மாக்கை அகற்ற வேண்டும். எங்கள் குடும்பம் போல மற்றவர்கள் குடும்பம் ஆகிவிடக் கூடாது. 10 லட்சம் செலவு செய்தும் எனது மகன், கணவர் பிழைக்கவில்லை. படிக்கும் மாணவர்களாவது முன்னேறி வர வேண்டும். எங்களுடைய பாதுகாப்புக்காக வந்துள்ள விஜய் எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக்கை அகற்ற வேண்டும். மக்கள் குடித்துக் கொண்டு வழித்தடத்தில் படுத்துக் கொண்டு அட்டகாசம் செய்வது, கிண்டல் கேலி போன்றவற்றில் ஈடுபடுகின்றனர் என்றனர்.

More Stories
ஆடுகளை திருடி காதலிக்கு விலை உயர்ந்த பரிசு: வாலிபரை மடக்கி பிடித்த மக்கள்:
தமிழகத்தில் வாக்களித்த ‘வெளிநாட்டு குடியுரிமை’ கொண்டவர்கள் கைது …
பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்பப் பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்…