September 10, 2026

 ரூ.504 கோடி மோசடி வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி கைது:

அரியானா மாநில அரசு நிதி ரூ.504 கோடியை மோசடி செய்த வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது. அரியானா மாநில அரசின் 8 துறைகளுக்கு சொந்தமான ரூ.504 கோடி உபரி நிதியை, போலி நிரந்தர வைப்பு நிதி கணக்குகள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த மெகா மோசடி வழக்கில், ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியின் முன்னாள் பகுதி தலைவர் ஷமீம் தார் மற்றும் ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் முன்னாள் கிளை மேலாளர் சரண்ஜித் சிங் ரந்தாவா ஆகியோரை சிபிஐ ஏற்கனவே கைது செய்திருந்தது. மேலும், இந்த வழக்கில் ஐடிஎப்சி பர்ஸ்ட் மற்றும் ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளை சேர்ந்த 6 அதிகாரிகள், அரியானா மாநில அரசு ஊழியர்கள் 3 பேர், 2 தனியார் நிறுவனங்கள் மற்றும் 6 தனிநபர்கள் என மொத்தம் 17 பேர் மீது சிபிஐ இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அரியானா மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பிரதீப் குமார் மற்றும் 2 முன்னாள் வங்கி அதிகாரிகளை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து சிபிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘மோசடியான பணப் பரிவர்த்தனைகள் மூலம் அரசு நிதி ரூ.169 கோடியை கையாடல் செய்து மாநில அரசுக்கு அவர் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளார். பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத அவர், தீவிர தேடுதலுக்கு பிறகு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி அதிகாரிகளாக இருந்த இருவரும் அரசு நிதியை போலி கணக்குகள் மூலம் திருப்பி விடுவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed