தனது 13 வயது சிறுமி மகள் மீது காதலன் தவறான எண்ணம் கொண்டதால் ஆத்திரமடைந்த பெண், தனது சகோதரியுடன் இணைந்து காதலனை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் ட்ரோனிகா சிட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஜாகிர். இவருக்கும் கிரண் என்பவருக்கும் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்தது. இருவரும் ‘லிவ்-இன்’ உறவில் இருந்து வந்த நிலையில், கிரணின் மூன்று குழந்தைகளுடன் ஜாகிர் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே, ஜாகிர் தனது 13 வயது மகள் மீது தவறான எண்ணம் கொண்டு பாலியல் ரீதியாக செயல்படுவதாக கிரண் சந்தேகித்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
ஜாகிரை கொலை செய்ய கிரணும், அவரது சகோதரி காஷிஷும் திட்டமிட்டனர். இருவரும் வீட்டில் இருந்த ஜாகிரை கட்டையால் தலையில் தாக்கி மயக்கமடைய செய்தனர். பின்னர், துண்டு ஒன்றால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தனர். கொலையை மறைக்க, அந்த துண்டை சீலிங் பேனில் கட்டி, விசிறி பிளேடுகளை வளைத்து தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடினர். பின்னர், ஜாகிரின் செல்போனில் இருந்து அவரது சகோதரர் சமீர் கானை அழைத்து, அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொய்யான தகவலை கூறினர். கொலைக்கு பயன்படுத்திய கட்டையை வீட்டின் மேற்கூரையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு பின்னால் அவர்கள் மறைத்து வைத்திருந்தனர். போலீசாரின் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அவர்கள் ஜாகிரை கொன்றதை ஒப்புக் கொண்டனர். இது குறித்து ஏ.சி.பி. சித்தார்த் கவுதம் கூறுகையில், ‘விசாரணையின் போது, கிரணின் 13 வயது மகள் மீது ஜாகிர் தவறான எண்ணம் கொண்டதாக அவர்கள் சந்தேகித்ததால், அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிவித்தனர்’ என்று கூறினார்.

More Stories
பவுடர்’ வீடியோ: “கொன்றுவிடுவோம் என மிரட்டுகிறார்கள்” – பள்ளி நண்பர் பரபர புகார்…
ரூ.504 கோடி மோசடி வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி கைது:
தமிழகத்தில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு…