டீசல் விலை உயர்வால் ஏற்கனவே லாரி வாடகை 25% உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், தனியார் பேருந்து பயணக் கட்டணமும் உயர்ந்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் தடுமாற்றம் அதிகரித்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. குறிப்பாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், வீடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளை ஏற்றின. இதன் காரணமாக ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. மேலும், டீசல் விலை உயர்வு காரணத்தால், தமிழ்நாட்டில் லாரி வாடகைகளும் உயர்த்தப்பட்டன. இது மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது.
தற்போது ஈரான் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்மூஸ் நீரிணை திறக்கப்பட்டது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துவருகிறது.இதனைத் தொடர்ந்து இன்று வணிக சிலிண்டர்களின் விலை சென்னையில் ரூ.172.50 குறைந்து ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது.
இத்தகைய நிலையில், திருப்பூரில் தனியார் பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக அறிவிக்கப்படாமல் உயர்த்தப்பட்ட இந்தக் கட்டணத்தினால், பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து கோவை செல்ல தனியார் பேருந்துகளில் 36 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 42 ரூபாய் வசூலிக்கப்படும் என தனியார் பேருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
டீசல் விலை உயர்வு மற்றும் பராமரிப்பு செலவினங்கள் உயர்ந்துள்ள சூழலில் கடந்த 10 ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படாததால் தினந்தோறும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதால் பேருந்து கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அறிவிக்கப்படாத கட்டண உயர்வு காரணமாக மாணவர்கள் மற்றும் எளிய பொதுமக்கள் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூரைத் தொடர்ந்து மற்ற இடங்களிலும் தனியார் பேருந்து பயணக் கட்டணம் உயருமோ எனும் அச்சமும் எழுந்துள்ளது.

More Stories
பவுடர்’ வீடியோ: “கொன்றுவிடுவோம் என மிரட்டுகிறார்கள்” – பள்ளி நண்பர் பரபர புகார்…
மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; ‘லிவ்-இன்’ காதலனை கழுத்தை நெரித்து கொன்ற சகோதரிகள்:
ரூ.504 கோடி மோசடி வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி கைது: