October 27, 2026

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அதிர்ச்சி: சாதுக்கள் வேடத்தில் கஞ்சா விற்பனை? போலீசார் அதிரடி சோதனை!

திருவண்ணாமலை:

ஆன்மிக நகரமான திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்களின் போர்வையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கண்டறியும் வகையில், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள 14 கிலோமீட்டர் தூர கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான சாதுக்கள் தங்கி, பக்தர்களிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கும் ஒரு சில நபர்கள், சாதுக்கள் போர்வையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தி வருவதாகவும், விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் காவல் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் கிரிவலப்பாதையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, சிம்ம தீர்த்தகுளம் அருகிலுள்ள நடைபாதைகளில் வசிக்கும் சாதுக்களின் பைகள் மற்றும் உடமைகளைப் போலீசார் தீவிரமாகச் சோதனையிட்டனர். மேலும், அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதிகளிலும் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வெளிமாநிலங்களில் இருந்து கிரிவலப்பாதைக்கு வரும் நபர்களுக்கும் இங்குள்ளவர்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்படுகின்றன என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கிரிவலப்பாதையின் புனிதத்தைக் காக்கும் பொருட்டு, புதிதாக வந்து தங்கும் சாதுக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். கிரிவலப்பாதை முழுவதும் இது போன்ற சோதனைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.