October 27, 2026

கேரளாவில் பயங்கர விபத்து: நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிய சொகுசு கார் மோதி வியாபாரி பலி!

கேரளாவில் 17 வயது சிறுவன் ஓட்டிய சொகுசு கார், ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் 55 வயது வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மாவட்ட நீதிபதியின் மகன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளா |

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நீதிபதியின் மகன் ஓட்டிய சொகுசு கார் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டம் மஞ்செயில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலகிருஷ்ணன் (55). வியாபாரியான இவர், இன்று (அக்டோபர் 26) அதிகாலை சுமார் 2.20 மணியளவில் சேரநல்லூர் பகுதியில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு கார், எதிர்பாராத விதமாக ஜெயபாலகிருஷ்ணன் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

மோதிய வேகத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜெயபாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நீதிபதியின் மகன் என்பது அம்பலம்!

விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்பதும், அவர் மாவட்ட நீதிபதி ஒருவரின் மகன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், அவரை சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் தீவிர விசாரணை

இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

18 வயது பூர்த்தியடையாத சிறுவன் சொகுசு காரை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நிகழ்ந்த விதம் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.