October 27, 2026

டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்த புதிய கட்டுப்பாடு! நவம்பர் 1 முதல் அதிரடி மாற்றம்!

சென்னை, அக்டோபர் 27:

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணம் செலுத்தும் நடைமுறையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான விற்பனையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்கவும் நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கும் அதிகமான மதிப்பில் மதுபானங்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் யுபிஐ (UPI), டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் ரொக்கமாகப் பணம் பெற அனுமதி இல்லை.

ஜனவரி 1 முதல் மேலும் கடுமையாகும் கட்டுப்பாடு!

இந்த நடைமுறையின் அடுத்த கட்டமாக, 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ரூ.500-க்கும் அதிகமான மதிப்பில் மதுபானங்கள் வாங்குபவர்களுக்கும் மின்னணு பணப்பரிவர்த்தனை கட்டாயமாக்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 4,048 டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

கூடுதல் விலை வசூலுக்கு முற்றுப்புள்ளி?

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

ரொக்கமாகப் பணம் செலுத்தும்போது அதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால், புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவும், ஒவ்வொரு விற்பனைக்கும் முறையான பணப்பரிவர்த்தனைப் பதிவுகளை உருவாக்கவும் டிஜிட்டல் கட்டண முறையை விரிவுபடுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு!

மதுபானக் கடைகளில் அதிக அளவில் ரொக்கப் பணம் கையாளப்படுவதால், பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது, கள்ள நோட்டுகள், பணப்பற்றாக்குறை மற்றும் கணக்கு வேறுபாடுகள் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கான வசதிகளை உறுதிப்படுத்த மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை இயந்திரங்கள் மூலமாக மட்டுமே கட்டணம் பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆன்லைனிலும் மதுபானம் முன்பதிவு செய்யலாம்!

டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ள இணையவழி மதுபான முன்பதிவு வசதியையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த முறையில் இணையவழியாக மதுபானங்களை முன்பதிவு செய்து, அதற்கான தொகையைச் செலுத்திய பின்னர் சம்பந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று மதுபானங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

விற்பனை விவரங்களைக் கண்காணிக்க உத்தரவு!

ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் நடைபெறும் மொத்த விற்பனை, ரொக்கப் பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை வாரந்தோறும் சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் மதுபான விற்பனையில் முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதுடன், பணப்பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த முடியும் என டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய நடைமுறையால், தமிழகத்தில் மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்களின் பணம் செலுத்தும் முறையில் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது.