சென்னை:
காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு எளிதில் பயணம் செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 1-ந்தேதி (வியாழக்கிழமை), அக்டோபர் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை – காந்தி ஜெயந்தி), அக்டோபர் 3-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் அக்டோபர் 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து மற்றும் பிற முக்கிய இடங்களிலிருந்து ஏராளமான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, வழக்கமாக இயக்கப்படும் தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பேருந்து இயக்க விவரங்கள்:
- சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து: திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு அக்டோபர் 1 அன்று 1,580 பேருந்துகளும், அக்டோபர் 2 அன்று 745 பேருந்துகளும், அக்டோபர் 3 அன்று 895 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
- கோயம்பேடு மற்றும் மாதவரம்: கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு போன்ற இடங்களுக்கும், மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- மற்ற நகரங்கள்: பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
- ஊர் திரும்புவோர் வசதி: ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, பல்வேறு இடங்களிலிருந்து 1,471 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு முக்கிய வேண்டுகோள்:
இந்த தொடர் விடுமுறையில் பயணம் செய்ய இதுவரை ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் www.tnstc.in இணையதளம் அல்லது TNSTC Mobile App மூலமாக முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்கமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பேருந்து நிலையங்களில் சிறப்பு இயக்கங்களை கண்காணிக்கவும், பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்யவும் உரிய அலுவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பயணிகள் இந்தச் சேதியினை முழுமையாக பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

More Stories
மதுரையில் எம்.எல்.ஏ வருகைக்காக 2½ மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள்! போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி!
தவெகவுக்கு முழு ஆதரவு! பிராமணர் சங்கம் அதிரடி அறிவிப்பு – தமிழக அரசியலில் பரபரப்பு!
டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்த புதிய கட்டுப்பாடு! நவம்பர் 1 முதல் அதிரடி மாற்றம்!