தேனி: மகனை கொன்று உடலை கூறு போட்டு ஆற்றில் வீசிய கட்சி நிர்வாகி… 

தேனியில் சொத்துப் பிரச்னையில் பெற்ற மகனை கொன்று துண்டு, துண்டாக வெட்டி கூறு போட்டு ஆற்றில் வீசிய தந்தை மற்றும் அவரது நண்பரை 3 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பாலா என்கிற வேந்தர் பாலா (49). இவர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மாவட்ட தலைவர். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ராஜலட்சுமிக்கு மகன் ஸ்ரீகாந்த் (19) மற்றும் 2 மகள்கள். கருத்துவேறுபாட்டால் முதல் மற்றும் இரண்டாம் மனைவிகளைப் பிரிந்த வேந்தர் பாலா 3வது மனைவியுடன் எம்ஜிஆர் நகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், முதல் மனைவியின் மகனான ஸ்ரீகாந்த், தங்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு தந்தை வேந்தர் பாலாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால், தந்தை, மகன் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்ரீகாந்த் திடீரென மாயமானார். இதையடுத்து மகனை காணவில்லை என தேனி போலீசில், அவரது தாயார் ராஜலட்சுமி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆனால், துப்பு துலங்கவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஐகோர்ட் மதுரை கிளையில் ராஜலட்சுமி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இப்புகார் மனுவை ஏற்ற நீதிமன்றம் இவ்வழக்கை தேனி போலீசாரிடமிருது கடந்த ஏப்ரல் மாதம் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றியது.

அவர்களது விசாரணையில் சொத்து பிரச்னையில் தந்தை, மகனுக்கு இடையே முன்விரோதம் இருந்ததை அறிந்து வேந்தர் பாலா மற்றும் அவரது நண்பர்களான அலெக்ஸ் (28), கருப்பையா (53) ஆகியோரை கடந்த 2 மாதமாக கண்காணித்து வந்தனர். இதில், அலெக்ஸை பிடித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், ‘சொத்து பிரச்னையில் வேந்தர் பாலாவுக்கும் அவரது மகனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால், வேந்தர் பாலா தனது நண்பர்களான கருப்பையா, அலெக்ஸ் ஆகியோர் உதவியுடன் கடந்த 2023 செப்டம்பர் மாதம் ஸ்ரீகாந்தை கடத்தி வந்து தேனி அரண்மனைப்புதூர் ரயில் தண்டவாளம் அருகே, மகனை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பின்னர் கறிவெட்டும் கத்தியால் ஸ்ரீகாந்தின் உடலை துண்டு, துண்டாக வெட்டி முல்லையாற்றில் வீசியுள்ளனர்.

வெட்டுவதற்கு பயன்படுத்திய கத்திகளை கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள தாமரைக்குளம் கண்மாயில் எறிந்துள்ளனர். பின்னர் ஒன்றும் தெரியாதது போல இருந்துள்ளனர் என தெரிய வந்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார், வேந்தர் பாலாவையும், அலெக்ஸையும் கைது செய்தனர். தலைமறைவான கருப்பையாவை தேடி வருகின்றனர். மேலும், தாமரைக்குளம் கண்மாயில் வீசிய கத்திகளையும் கைப்பற்றினர். சொத்துப் பிரச்னையில் பெற்ற மகனை தந்தையே கொன்று துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.