அதிமுகவில் தொடர்ச்சியாக அரங்கேறும் அரசியல் மாற்றங்கள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சசிகலா மீண்டும் அதிமுக அரசியலில் முக்கிய பங்கு வகிக்க முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது கட்சிக்குப் பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் தலைமையைச் சுற்றி அதிருப்தி நிலவுவதாகவும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தங்களின் அடுத்தகட்ட அரசியல் முடிவுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மன்னார்குடி வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்களின்படி, எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி மேலும் பலவீனமடையும் என சசிகலா கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விரக்தியில் இருக்கும் சில முன்னாள் அமைச்சர்களை அவரது தரப்பு ரகசியமாகத் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல அணிகளாகப் பிரிந்த அதிமுக, தற்போது தொடர் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கட்சியை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கு எந்த அரசுப் பதவியும் தேவையில்லை; ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் மீண்டும் வலுப்பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று சசிகலா தரப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது
இந்தச் சூழலில் அதிமுக நிர்வாகிகள் யாரும் சசிகலா தரப்புடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவின் மறுபிரவேச முயற்சி கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்குமா அல்லது புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது வரும் நாட்களில் தெளிவாகும்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!