வீடு புகுந்து குழந்தையை கடத்த முயன்ற பெண் கைது…

 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஓடக்கரை தெருவை சேர்ந்தவர் சுபாஷ். அரசூர் 1 கிராம நிர்வாக அலுவலர். நேற்று மதியம் வீட்டுக்கு வெளியே நின்றிருந்தார். அப்போது சுமார் 45வயது மதிக்கத்தக்க பெண் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து சுபாஷ் மனைவியின் கழுத்தை நெரித்து நகையை பறிக்க முயன்றுள்ளார். அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்தனர்.

உடனே அந்த பெண், சுபாஷின் மூன்று வயது மகளை தூக்கிக் கொண்டு ஓட முயன்றுள்ளார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு விஏஓ சுபாஷ் மற்றும் உறவினர்கள் அந்தப் பெண்ணை பிடித்து குழந்தையை மீட்டனர். அந்த பெண் அவர்களை தாக்கிவிட்டு ஓடியுள்ளார். ஆனால் வர்த்தக சங்கத்தினர் அந்த பெண்ணை பிடித்து சாத்தான்குளம் போலீசில் ஒப்படைத்தனர். புகார் அளித்தும் போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் செய்ததால் காவல் நிலையத்தில் அப்பகுதியினர் திரண்டனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தப்பெண், தூத்துக்குடி பூபாலராயபுரம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்பதும், மேல சாத்தான்குளம் பகுதியில் உள்ள வீட்டில் ஒரு மாதமாக குடியிருந்து வருவதும் தெரிய வந்தது. மேலும் அந்தப் பெண் போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பிரிவில் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.