April 28, 2026

ஏழுமலையானை தரிசனம் செய்ய போலி பரிந்துரை கடிதம்…

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் பெற தெரிந்த நண்பர் மூலம் நவீன்குமார் என்பவரை தொடர்பு கொண்டனர்.

அதனடிப்படையில், நவீன்குமார் சுவாமி தரிசனம் செய்ய வைப்பதாக கூறி ஒவ்வொருவரிடமும் இருந்து ரூ.3,000 வீதம் மொத்தம் ரூ.36,000 கூகுள் பே மூலம் பெற்று கொண்டார். பின்னர் அறங்காவலர் குழு உறுப்பினர் பரிந்துரைக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து, போலி டிக்கெட் தயாரித்து வாட்ஸ்அப் மூலம் அனிதாவுக்கு அனுப்பினார். இதனை பெற்று கொண்ட அனிதா கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி அன்று திருமலைக்குச் வந்து அதிகாரிகளிடம் அந்தக் கடிதங்களைக் காட்டினார்.

அப்போது, ​​அவை போலியானவை எனக் கண்டறியப்பட்டன. இதனால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்ததோடு பணமும் ஏமாற்றப்பட்டதால் அனிதா தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் மாவட்ட எஸ்.பி. சுப்பாராயுடு திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி முரளி கிருஷ்ணா தலைமையிலான ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. அதனடிப்படையில் நேற்று முன்தினம் சிறப்பு குழுவினர் நவீன்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு மொபைல் போன் ரூ.36,000 பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்தையும், சேவைகளையும் அதிகாரப்பூர்வ வழிகள் மூலமாக மட்டுமே பெற வேண்டும். சமூக ஊடகங்கள் அல்லது தனிநபர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நம்பி பணம் செலுத்த வேண்டாம்.